அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும்.
அவள் மனதில் பரவி இருந்த இனம் புரியாத நிம்மதி அவளுக்கு வியப்பாக இருந்தது. இதில் உள்ள மனிதர்களும் அவளுக்கு அதே நிம்மதியை தருவார்களா? உள்ளடக்கிய பெருமூச்சும் கொஞ்சம் நம்பிக்கையின்மையுமாய் தான் வாயிலை நோக்கி அடுத்த அடியை வைத்தாள் மிதுனா. இவ்வளவு பெரிய வீட்டின் வாயிலில் ஒரு காவலாளியை கூட காணோமே என்று அவள் எண்ணிக்கொண்டு இருக்கையிலேயே, "என்னம்மா வேண்டும்? நீங்கள் யார்?" என்று கேள்விகளோடு ஒரு வேலையாள் அவளை நோக்கி விரைந்து வந்தான்.
எதிர்பாராது கேட்ட குரல் என்றாலும், எதிர்பார்த்திருந்த கேள்வி தான் என்பதால் தடுமாறாமல் அவளால் பதிலுறுக்க முடிந்தது. "இங்கே சுந்தரம் தாத்தா..சாரை பார்க்க வேண்டும். என் பெயர் மிதுனா. சந்தானம் ஐயா பேத்தி என்று சொன்னால் சாருக்கு தெரியும்."
சுந்தரம் முன்னாலேயே தகவல் தந்திருப்பார் போலும், வேலையாளின் பாவனை உடனே மாறி ஒரு மரியாதை அவனை தொற்றிக்கொண்டது. "அய்யா சொன்னாருங்கம்மா. ஆனா இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது. நீங்க உள்ள போங்க. முன்னறைக்கு வலது பக்க அறையில் தான் பெரியவர் இப்போது இருப்பார். " என்று சொல்லி வழியும் காண்பித்துவிட்டு தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட குழாயை சுற்றி வைக்க சென்றுவிட்டான்.
சுந்தரம் முன்னாலேயே தகவல் தந்திருப்பார் போலும், வேலையாளின் பாவனை உடனே மாறி ஒரு மரியாதை அவனை தொற்றிக்கொண்டது. "அய்யா சொன்னாருங்கம்மா. ஆனா இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது. நீங்க உள்ள போங்க. முன்னறைக்கு வலது பக்க அறையில் தான் பெரியவர் இப்போது இருப்பார். " என்று சொல்லி வழியும் காண்பித்துவிட்டு தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட குழாயை சுற்றி வைக்க சென்றுவிட்டான்.
ஹ்ம்ம்.. வழி காண்பித்ததோடு அவன் வேலை முடிந்து விட்டது. இனி உள்ளே சென்று என்ன சொல்ல போகிறாள்? 'என் தாத்தா காசிக்கு செல்லவேண்டி இருப்பதால்..எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால், நீங்கள் என் தாத்தாவிற்கு உயிர் சிநேகிதர் என்பதால், கொஞ்ச நாள் .. என் தாத்தா வரும் வரை, உங்கள் பாதுகாப்பில் இருக்க அனுமதி கொடுங்கள் ' என்றா? எவ்வளவு சங்கடமாக இருக்கிறது? இந்த தாத்தாவிற்கு ஏன் இதெல்லாம் புரியமாட்டேன் என்கிறது?
ஆனால், இத்தனை வருடங்களாக தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக ஒரு குறையும் இன்றி அருமையாக வளர்த்து, தன் கடைசி ஆசை வாழ்நாளில் ஒரு முறை காசிக்கு சென்று வருவது ஒன்று தான் என்று அவர் கூறியபோது அவளே தான் இந்த யோசனையை அவருக்கு சொன்னாள். குறிப்பாக இந்த சுந்தரம் தாத்தா வீட்டில் விடுங்கள் என்று கூறவில்லை என்றாலும், ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் பாதுகாப்பாக இருப்பேன் தாத்தா என்று கூறியது அவள்தான். அவர் தான் ஒரு வாரம் கழித்து இந்த சுந்தரம் தாத்தாவை பற்றி அவளுக்கு சொல்லி அவளையும் சம்மதிக்க வைத்து இங்கே அனுப்பியும் வைத்தார். ஏதோவொரு லேடீஸ் ஹாஸ்டலில் அவளை விட அவருக்கு உடன்பாடில்லை.
சுந்தரம் அவரின் நெருங்கிய நண்பர். பால்ய சிநேகிதம். ஒரே குடும்பம் போல அந்நியோன்யமாம். பிறகு காலப்போக்கில் தத்தம் குடும்பம் என்று விதி அவர்களை பிரித்தது. அதே விதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்செயலாய் சந்திக்கவும் வைத்தது. பிரிந்த நட்பு அதே சுருதியில் தொடங்கிய காலகட்டத்தில் தான் சந்தானத்தின் இந்த காசி பயணமும், அதன் விளைவாக மிதுனாவின் இந்த 'சுந்தரவன' பயணமும்.
முகம்கூட பார்த்தறியாத அந்த சுந்தரம் தாத்தா..அய்யா என்று சொல்ல வேண்டுமோ..அவர் அவளை எப்படி எதிர்கொள்வார்? அவர் அவளை நன்றாகவே நடத்தினாலும், அவரது குடும்பத்தாருக்கு அவள் வரவு நல்வரவாகுமா? காவலாளியின் பாவனையில் இருந்த வரவேற்புத் தன்மை சற்று தெம்பளித்தது. அவள் மேலும் குழம்பி தயங்குமுன், அந்த காவலாளி சொன்ன முன்னறையையே அடைந்துவிட்டாள். மேற்கொண்டு தானே வலபக்க அறை நோக்கி செல்வதா அல்லது குரல் கொடுப்பதா என்று அவள் தன்னுள் தர்க்கம் செய்தவாறே சில அடி எடுத்து வைத்து, பாதி சாத்தியிருந்த அந்த அறை கதவில் கை வைக்க, "வேறு ஏதாவது பேசுங்கள், தாத்தா!" என்று கணீரென்ற ஆண் குரல் ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது.
No comments:
Post a Comment